VIDEO: ‘இவரா இப்படி பண்ணது.. நம்பவே முடியலையே’.. அவுட்டான கோபத்தில் பட்லர் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அவுட்டான விரக்தியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ஹெல்மெட்டை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடர் 15-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக இந்த ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், முகமது சமி, ரஷித் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 45 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும், டேவிட் மில்லர் 42 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்சின் போதும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது ஜாஸ் பட்லர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் களத்தில் நின்றார்.
— Cred Bounty (@credbounty) May 29, 2022
அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் பந்து பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. அதனால் 39 ரன்களில் ஜாஸ் பட்லர் அவுட்டாகி வெளியேறினார். இதனால் கோபத்துடன் பெவிலியன் திரும்பிய ஜாஸ் பட்லர், ஹெல்மெட்டை தூக்கி வீசி எறிந்தார். எப்போது அமைதியாக இருக்கும் ஜாஸ் பட்லராக இப்படி கோபப்பட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.