"120 வருஷத்துல இதான் முதல் தடவ.." ரிஷப் பண்ட் செய்த வேற லெவல் சாதனை.. தோனியோட '17' வருஷ ரெக்கார்டும் காலி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நேற்று (01.07.2022) ஆரம்பமானது.

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் வைத்து இந்த டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ரிஷப் பண்ட் - ஜடேஜா பார்ட்னர்ஷிப்
98 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தவித்ததால், பெரிய அளவில் ரன் எடுக்க முடியாது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 6 ஆவது விக்கெட்டுக்கு கை கோர்த்த ரிஷப் பண்ட் - ஜடேஜா ஜோடி, இங்கிலாந்து அணி பந்து வீச்சை புரட்டி எடுத்தது. அதிலும் குறிப்பாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார்.
தோனி ரெக்கார்ட் காலி..
111 பந்துகள் மட்டுமே சந்தித்த பண்ட், 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 146 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு பக்க பலமாக நின்ற ஜடேஜா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து, மொத்தம் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது மட்டுமில்லாமல், 146 ரன்கள் அடித்ததுடன் சில அரிய சாதனைகளையும் படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், 120 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எந்த வீரரும் 100 பந்துகளுக்கும் குறைவாக சந்தித்து சதமடித்ததில்லை. ஆனால், 89 பந்துகளில் சதமடித்து ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். அதே போல, தோனியின் 17 ஆண்டுகால சாதனை ஒன்றையும் ரிஷப் பண்ட் உடைத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 93 பந்துகளில் சதமடித்திருந்தார் தோனி.
இங்கிலாந்துக்கு எதிரா 2 சதம்..
இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர், அடித்த அதிவேக சதமாக தோனியின் சதம் தான் இருந்தது. அதனையும் ரிஷப் பண்ட் தற்போது காலி செய்துள்ளார். மேலும், ஆசியாவுக்கு வெளியே உள்ள மைதானங்களில் மொத்தம் நான்கு சதங்கள் அடித்துள்ள பண்ட், அதில் இரண்டு சதங்களை இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்துள்ளார்.
இந்திய அணி பெரிய அளவில் ரன் சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்த அதே வேளையில், ஒரே ஒரு சதத்தால், அணியின் ரன்னையும் சீர் செய்து, பல சாதனைகளையும் படைத்து அசத்தி உள்ளார் ரிஷப் பண்ட்.

மற்ற செய்திகள்
