"ஜெயிச்சு PLAYOFF கூட போயிருக்கலாம்.." லட்டு மாதிரி வந்த வாய்ப்பு.. தவற விட்ட டெல்லி.. கடைசியில் ரிஷப் பண்ட் சொன்ன பரபரப்பு காரணம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று (21.05.2022) நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்தது.
இந்த போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மறுபக்கம், டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தால், அவர்களே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருப்பார்கள்.
இதனால், இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், பெங்களூர் மற்றும் டெல்லி அணியின் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு இருந்தது.
கடைசி கட்டத்தில் பரபரப்பு
தொடர்ந்து, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் மற்றும் ப்ரேவிஸ் ஆகியோர் அசத்தலாக ஆடி ரன் சேர்த்திருந்தனர். அப்படி இருந்தும் நடுவில் சில விக்கெட்டுகள் சரிந்ததால், கடைசி கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டியை மாற்றிய டிம் டேவிட்
டெல்லி அணிக்கும் வெற்றி வாய்ப்பு உருவாக, போட்டியிலும் விறுவிறுப்பு உருவானது. அப்படி இருக்கையில், மும்பை வீரர் டிம் டேவிட் 11 பந்துகளில், 4 சிக்ஸர்களுடன் 34 ரன் எடுக்க, போட்டி அப்படியே மும்பை பக்கம் மாறி இருந்தது. கடைசி ஓவரில், 5 பந்துகளை மீதம் வைத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இதனால், டெல்லி அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்க, நான்காவது அணியாக பெங்களூர் தகுதி பெற்றது.
டெல்லி அணி எடுத்த முடிவு
ஆனால், இந்த போட்டியின் திருப்புமுனையாக இருந்த டிம் டேவிட் விக்கெட் குறித்த விஷயம் ஒன்று, தற்போது அதிகம் பரபரப்பை கிளப்பி உள்ளது. டிம் டேவிட் சந்தித்த முதல் பந்திலேயே பேட்டில் பட்டு அவுட் போல தெரிந்தது. டெல்லி வீரர்கள் அவுட்டிற்கு அப்பீல் செய்ய, நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். தொடர்ந்து, டெல்லி அணி DRS செய்ய வாய்ப்பு இருந்தும், அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் ரீப்ளேயில் டிம் டேவிட் பேட்டில் பட்டது சரியாக தெரிந்தது.
ரிஷப் பண்ட் சொன்னது என்ன?
ஒரு வேளை, டெல்லி அணி DRS எடுத்திருந்தால், டிம் டேவிட் அவுட்டாகி, டெல்லி அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவும் வாய்ப்பு உருவாகி இருக்கும். ஆனால், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் DRS எடுக்காமல் போனது, பெரிய அளவில் விவாதத்தை உண்டு பண்ணி இருந்தது. இது பற்றி, ரிஷப் பண்ட்டிடம் போட்டிக்கு பின்னர் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய ரிஷப் பண்ட், "எனக்கு அது பேட்டில் பட்டது போல தான் தெரிந்தது. ஆனால், வட்டத்திற்குள் ஃபீல்டிங் நின்ற வீரர்கள் யாருக்கும் போதுமான அளவில் நம்பிக்கை ஏற்படவில்லை. அப்பீல் செய்யலாமா என கேட்ட போது யாரும் சரியாக பதில் கூறவில்லை. இதன் காரணமாக, இறுதியில் நான் ரிவியூ எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் DRS எடுக்காமல் போனது பற்றி, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.