‘இது அப்படியே தோனி ஸ்டைல்’.. ஹர்திக் கேப்டன்ஷி பற்றி முன்னாள் வீரர் சொன்ன ‘சூப்பர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தோனி போன்று ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டதாக ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 487 ரன்களும், 8 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்ட்யா எடுத்துள்ளார்.
அதேபோல் கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழி நடத்தினார். திடீரென ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப பவுலிங்கில் மாற்றங்கள் மற்றும் செய்வது, பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடுவது என பொறுப்பாக செயல்பட்டார். தொடக்கத்தில் சற்று கோபத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா, அடுத்தடுத்த போட்டிகளில் நிதானமான போக்கையே கடைபிடித்தார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது அமைதியாகவே ஹர்திக் பாண்ட்யா காணப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷியை தோனியுடன் ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி தோனியை போன்றே இருந்தது. தோனி, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப திடீரென திட்டத்தை மாற்றி அமைப்பார். அதேபோல் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியை மிகவும் உற்சாகத்துடனும், நிதானமாகவும் கையாண்டதில் இருந்து இது தெரியவந்தது.
இறுதிப்போட்டியில் கூட ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பாண்ட்யா சரியான முடிவை எடுத்தார். அதாவது, சாய் கிஷோருக்கு வழக்கமான ஆர்டரில் ஓவரை கொடுக்காமல் 16-வது ஓவரில் தான் கொடுத்தார். இதே போன்று 4-வது வீரராக களமிறங்கி எந்த நேரத்தில் அதிரடியாக ஆட்ட வேண்டும், எங்கு நிதானம் வேண்டும் என நன்கு தெரிந்து ஆடினார்’ ஹர்திக் பாண்ட்யாவை புகழ்ந்து பேசியுள்ளார்.