"யாரு சாமி இவன்… கொஞ்ச நேரத்துல மிரட்டிட்டான்” – முதல் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த RCB வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடந்த சி எஸ் கே மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான போட்டியில் RCB வீரர் சுயாஷ் கவனம் ஈர்த்துள்ளார்.

RCB vs CSK…
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று (12.04.2022) மும்பை மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது.
ஷிவம் துபே உத்தப்பா கூட்டணி…
இதில் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். ருத்துராஜ் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் நேற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மொயின் அலியும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ராபின் உத்தப்பாவோடு கைகோர்த்த ஷிவம் துபே, அதிரடியில் இறங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து சிக்சர் மழைப் பொழிந்து ரன் ரேட்டை உயர்த்தினார்கள். இருவரும் இணைந்து 165 ரன்களை சேர்த்தனர். உத்தப்பா 88 ரன்களோடும், ஷிவம் துபே 95 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் இறுதியில் சி எஸ் கே 216 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்தது.
போராடிய RCB….
இதையடுத்து களமிறங்கிய RCB அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்து 23 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆனால் அந்த அணியில் க்ளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், சபாஷ் நதீம் மற்றும் சுயாஷ் பிரபுதேஸாய் ஆகியோர் அதிரடியாக விளையாடி கடைசி வரை போராடினர். இதில் அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் அறிமுக வீரராக களமிறங்கிய பிரபுதேஸாய்தான். பீல்டிங்கின் போது சூப்பரான ரன் அவுட் மூலம் மொயின் அலியை ஆட்டமிழக்கச் செய்த அவர், பேட்டிங்கிலும் சி எஸ் கே பவுலர்களை மிரட்டினார்.
ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் 18 பந்துகளில் 34 ரன்களை சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸும் அடக்கம். தீக்ஷனா பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார். முதல் போட்டியிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடிய பந்துவீச்சாளர்களை சாதாரணமாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய பிரபுதேஸாய் ரசிகர்கள், வர்ணனையாளர்களைக் கவனத்தை ஈர்த்தார். இவர் களத்தில் இருக்கும் வரை போட்டி பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் போட்டிகளில் இவர் RCB அணிக்கு முக்கிய வீரராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
