ஆசிய கோப்பை 2022 : இந்திய அணிக்கு உருவான பெரிய சிக்கல்.. "இந்த மாதிரி ஒரு நேரத்துல தான் இப்டி நடக்கணுமா??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் லீக் சுற்று போட்டிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், மொத்தம் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இன்று (02.09.2022) பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மறுபக்கம், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வேறொரு பிரிவில் இடம்பெற்றிருந்தது. இதில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், வங்கதேச அணி லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இந்திய அணி முன்னேறியுள்ள நிலையில், தற்போது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உருவாகி உள்ளது. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாதியிலேயே விலகி உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்திருந்த ஜடேஜா, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசவும் செய்திருந்தார்.
அப்படி இருக்கையில், காயம் காரணமாக ஜடேஜா ஆசிய தொடரில் இருந்து விலகி உள்ளது, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில், இந்தியாவுக்கு சிக்கலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும், ஜடேஜாவுக்கு பதிலாக மாற்று வீரராக அக்சர் படேலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தங்களின் அடுத்த போட்டியில், இன்று வெற்றி பெறும் அணிகளில் ஒன்றுடன் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றின் முதல் போட்டியை செப்டம்பர் 04 ஆம் தேதி, துபாய் மைதானத்தில் வைத்து ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.