ஒரு பக்கம் தோனியின் அட்வைஸ்.. மறுபக்கம் சிக்ஸர்கள்.. சிங்கக்குட்டி மாதிரி தயாராகும் இளம் வீரர்.. "யாரு சாமி இந்த பையன்??.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், மார்ச் 26 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
கடந்த முறை, கோப்பையைத் தட்டிச் சென்ற சென்னை அணி, இந்த முறையும் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம், கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றிருந்தது. இதன் முதல் நாளில், பெரிய அளவில் வீரர்களைத் தேர்வு செய்யாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டாம் நாளில் பட்டையைக் கிளப்பியிருந்தது.
நட்சத்திர வீரர்கள்
டெவான் கான்வே, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் ஆகிய வீரர்களுடன், இந்திய இளம் வீரர்களையும் ஏலத்தில், சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. இன்னொரு பக்கம், ரெய்னா மற்றும் டுபிளஸ்ஸிஸ் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே எடுக்க முயற்சி செய்யாமல் போனது, ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியிருந்தது.
தீவிர பயிற்சி
இதனிடையே, ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் காரணத்தினால், தோனி, உத்தப்பா ஆகியோருடன் பல இளம் வீரர்கள், தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, சிஎஸ்கே அணி வெளியிட்டு வருகிறது.
ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர்
இந்நிலையில், இளம் வீரர் ஒருவருக்கு, தோனி அறிவுரை வழங்குவது தொடர்பான வீடியோக்கள், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு நடைபெற்றிருந்த U 19 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. அப்போது, இந்திய அணியில், ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் என்ற இளம் ஆல் ரவுண்டர் இடம்பெற்றிருந்தார்.
தோனியின் திட்டம் என்ன?
140 கி.மீ வேகத்தில் பந்து வீசக் கூடிய இவரை, சென்னை அணி போட்டி போட்டு, ஏலத்தில் எடுத்திருந்தது. தொடர்ந்து, பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராஜ்வர்தனை, தோனி மற்றும் சென்னை அணியின் பயிற்சியாளர்கள், அதிக முனைப்பு காட்டி, தயார் செய்து வருகின்றனர். U 19 அணி வீரர் ஒருவரை தோனி தயார் செய்து வருவதால், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்றும், தற்போதே கருத்து தெரிவிக்க ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடர்
அதிகம் சீனியர் வீரர்களைக் கொண்ட சென்னை அணியில், ராஜ்வர்தன் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அதிக விஷயங்களைக் கற்று, ஐபிஎல் அரங்கில் முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.