எவ்ளோ முக்கியமான மேட்ச்.. இப்படியா கவனக்குறைவா இருக்குறது.. ரிஷப் பந்தால் அடிக்காமலே 5 ரன்களை அள்ளிய தென் ஆப்பிரிக்கா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் செய்த தவறால் இந்திய அணி 5 ரன்களை பறி கொடுத்தது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அதில் 210 ரன்கள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் செய்த தவறால் தேவையில்லாமல் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ரன்கள் சென்றது. இப்போட்டியில் 50-வது ஓவரை இந்திய அணியின் ஷர்துல் தாகூர் வீசினார். அதனை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா ஸ்லிப்பில் அடித்துவிட்டார். அப்போது அங்கிருந்த புஜாரா பந்தை கேட்ச் பிடிக்க வந்தார். அந்த சமயம் விக்கெட் கீப்பர் பந்தும் டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றார். இருவரும் ஒரே நேரத்தில் வந்ததால் பந்தை தவறிவிட்டனர்.
அப்போது பந்து நேராக ரிஷப் பந்த் கீழே வைத்திருந்த ஹெல்மெட்டில் பட்டது. இதனால் விதிகளின் படி அம்பயர் அபராதமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ரன்களை வழங்கினார். இதனை அடுத்து இந்திய வீரர்கள் அந்த ஹெல்மெட்டை அப்புறப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு ரன் கூட போட்டியை மாற்றும் என்பதால், 5 ரன்கள் தேவை இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி சென்றது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனால் இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால், இதுபோன்று கவனக்குறைவால் ரன்களை பறி கொடுப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.