"அந்த ஒரு விஷயத்துல ஏன் இவ்ளோ தடுமாற்றம்??.. இந்தியா டீம பாத்தாச்சும் கத்துக்கோங்க 'ப்ளீஸ்'.." பாகிஸ்தான் அணியை கிழித்து தொங்க விட்ட 'அமீர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் (Mohammad Amir), தனது அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை முன் வைத்துள்ளார்.

பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், தனது 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, ஒய்வு முடிவினை அறிவித்திருந்தார். அப்போது, பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் சிலர் தன்னை துன்புறுத்தியதால், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், ஓய்வு முடிவை அறிவித்ததாக அமீர் தெரிவித்திருந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி மீது தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை அமீர் முன் வைத்துள்ளார். இது பற்றி பேசிய அவர், 'இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளில் இடம்பெறும் இளம் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் இருந்தே தயாராக ஆரம்பிக்கிறார்கள். இதனால், அதிக நெருக்கடிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதனையும் அதன் மூலமே அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் அவர்கள் அறிமுகமாகும் போது, எந்தவித பதற்றமும் இன்றி, முதல் தர போட்டிகளில் கற்றுக் கொண்டதை செயல்படுத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை அப்படியல்ல. தங்களது கிரிக்கெட் பயணத்தின் ஆரம்பத்தில் எதையும் கற்றுக் கொள்ளாத இளம் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காலடி எடுத்து வைத்த பிறகே, பயிற்சியாளர்களிடம் இருந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா ஆகியோரை பாருங்கள். சர்வதேச போட்டியில் அறிமுகமானதுமே எந்தவித பயமும் இன்றி மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள். அவர்களுக்கு, பயிற்சியாளர்களின் அறிவுரைகள் அதிகம் தேவைப்பட்டதில்லை. உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில், கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அவர்கள் அதிகம் கற்றுக் கொண்டதால், சர்வதேச போட்டிகளில் அவர்களது அறிமுக போட்டிகள் எளிதாக அமைந்தது.
இளம் வீரர்களை எப்படி ஆரம்பத்தில் இருந்தே மெருகேற்றி எடுப்பது எப்படி என்பதை இந்தியா போன்ற அணிகளிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும்' என முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
