"தினமும் இரவில் ஊசி போடணும், இல்லன்னா".. கால்பந்து ராஜா மெஸ்ஸியின் வலி நிறைந்த நிஜ கதை!?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

கால்பந்து உலகின் நம்பர் 1 வீரர் என அறியப்படும் லியோனல் மெஸ்ஸி, நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் நிறைய கோல்கள் அடித்ததுடன் இறுதி போட்டியிலும் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பை சேர்த்து 3 கோல்கள் அடித்திருந்தார்.
பல சாதனைகளை மெஸ்ஸி படைத்திருந்தாலும் உலக கோப்பை என்ற கனவு மட்டும் அப்படியே மீதமிருந்தது. அதனை தனது கடைசி உலக கோப்பை தொடரில் நிறைவேற்றி சாதித்து காட்டி உள்ளார். இந்த நிலையில், இப்படி ஒரு இடத்தை பிடிக்க மெஸ்ஸி பட்ட கஷ்டங்கள் குறித்த செய்தி, பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது.
அர்ஜென்டினா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தந்தைக்கு மகனாக பிறந்தவர் தான் லியோனல் மெஸ்ஸி. இவரது தந்தையும் பகுதி நேர கால்பந்து பயிற்சியாளராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்ததால் சிறு வயதிலேயே கால்பந்து போட்டியில் ஆர்வம் காட்டி உள்ளார் மெஸ்ஸி.
தனக்கு நான்கு வயதாக இருக்கும் போதே தந்தை பயிற்சி கொடுக்கும் சமயத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாட தொடங்கிய மெஸ்ஸி, பள்ளிக்காலத்தில் சில கிளப்களில் இணைந்து சிறந்த வீரராகவும் வலம் வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதற்கு மத்தியில் தான், சுமார் எட்டு வயது தாண்டிய பிறகும் ஐந்து வயது சிறுவனின் வளர்ச்சி மெஸ்ஸிக்கு இருந்தது, அவரது குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி இருந்தது. உடன் படிக்கும் மாணவர்கள் அதிக உயரத்தில் இருந்த போதும் மெஸ்ஸியின் உயரம் குறைவாக இருந்ததால் அவர் ஏளனத்திற்கும் ஆளானதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர் மெஸ்ஸியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, மெஸ்ஸியின் மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்பட நிறைய கால்பந்தாட்ட கிளப்களுக்கு ஏறி இறங்கியுள்ளார் மெஸ்ஸியின் தந்தை. ஆனால் பெரிய அளவில் கிளப்கள் எதுவும் பண உதவி செய்ய முன்வராத சூழலில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து கிளப் மெஸ்ஸியை அணியில் சேர்த்ததோடு அவரது மருத்துவ செலவையும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் அவரது உயரம் காரணமாக அதிகம் ஏளனம் செய்த பலரும் மெஸ்ஸியின் கால்பந்து திறனை கண்டு அதிர்ந்து போயினர். கால்பந்து ஆட்டத்தில் சாதனை புரிந்து வந்த மெஸ்ஸி, இரவு வேளையில் ஹார்மோன் குறைபாடுக்கான சிகிச்சைகளும், ஊசியையும் உடலில் செலுத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தன்னுடைய கால்களில் ஊசியை செலுத்த வேண்டும் என்ற சூழலில், ஒரு சிறிய சிரிஞ்சு மூலம் வளர்ச்சி ஹார்மோனை சுயமாகவே மெசேஜ் எழுதி கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு நாள் இரவிலும் மருந்தை ஃப்ரீசரில் இருந்து எடுத்து தன் தொடைக்குள் தானே ஊசி போட்டுக் கொள்வார் மெஸ்ஸி.
திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற மெஸ்ஸி, தொடர்ந்து கால்பந்து விளையாட்டில் தனது திறனை மேம்படுத்திக் கொண்டு, கடின உழைப்புகள் மூலம் தன்னை செதுக்கி, தனது சர்வதேச அணியான அர்ஜென்டினாவிலும் ஆடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு இன்று கால்பந்து உலகின் ஜாம்பவான் என பலரால் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்துள்ள மெஸ்ஸி, உயர குறைபாடு தொடர்பான அனைத்து தடைகளையும் தாண்டி சாதித்துள்ளார். அவரை பார்த்து உலக அளவில் பலரும் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என துடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "நடிகை, திருநங்கை, மாடல்".. எம்பாப்பேயின் காதல் பக்கங்கள்??.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

மற்ற செய்திகள்
