கால்பந்து வீராங்கனை மரணம்.. மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

இளம் வீராங்கனையாக இருந்த பிரியாவுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கால் அகற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை இளம்பெண் பிரியா உயிரிழந்துள்ளார்.
மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார். மாணவியின் மறைவு குறித்து பேசிய அமைச்சர், "உயிரிழந்த கால்பந்து வீராங்கனைக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் வலது காலில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் அதே காலில் பிரச்சனை ஏற்பட்டதால் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆம் தேதி சிகிச்சை பெற்றுள்ளார். அங்கே உள்ள மருத்துவர்கள் ஆர்தோ தெரபி என்ற அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து இருக்கிறார்கள்.
இருந்தாலும் சிகிச்சைக்கு பிறகு காலில் கட்டு போடும் போது அதனை அழுத்தமாக மருத்துவர்கள் கட்டி உள்ளார்கள். இதனால், மாணவியின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், மிகப் பெரிய அளவில் அவதிப்பட்ட மாணவி பிரியாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இங்கே அனைத்து துறை மருத்துவர்களால் அவருக்கு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் முதல்மைச்சர் கவனத்திற்கு சென்றதால் அவரின் உத்தரவின் பேரில் நான் வந்து மருத்துவர்களிடம் பிரியாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தேன். இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் பிரியாவிற்கு நேற்று நள்ளிரவு சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இன்று காலை 7:15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
இது ஈடு செய்ய முடியாத இழப்பு. 2 நாட்களுக்கு முன் குழந்தையின் பாதிப்பு தெரிந்தவுடன் முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று இதுகுறித்து விசாரிக்க மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் பெரியார் நகர் மருத்துவமனையில் விசாரித்த போது அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்களின் கவனக்குறைவு இதற்கு ஒரு காரணம் என கண்டறியப்பட்டது. இரண்டு மருத்துவர்களும் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
தொடர் விசாரணை நடத்தி துறை ரீதியாக விசாரணை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் இருவரும் இன்று பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். தொடர்ந்து கால் அகற்றப்பட்ட போது பிரியாவின் பெற்றோர்கள் பிரியாவுக்கு அரசு வேலை வேண்டும் என்றும் எங்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கும் அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்த நாங்கள், பிரியாவின் கால் காயம் குணமடைந்த உடன் பெங்களூரில் இருந்து பேட்டரி காலை வாங்கி கொடுக்க அறிவுறுத்தி இருந்தோம். இப்படி பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வந்த நிலையில், மாணவி உயிர் பறிபோனது அனைவரின் மனதையும் காயப்படுத்தியது.
பிரியாவின் குடும்பத்தார் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளவர்கள். எனவே அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், பிரியாவின் சகோதரிகளில் 3 பேரில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read | கர்மா ட்வீட் போட்டு வைரலான முகமது ஷமி.. "நாமளே இப்டி பண்ணலாமா?".. கேள்வி கேட்டு அஃப்ரிடி சொன்ன கருத்து!!

மற்ற செய்திகள்
