‘எங்களுடன் ஆஸ்திரேலியா வருவார்னு நினைச்சோம்’... ‘ஆனால்,’... ‘போட்டிக்கு முன்பு’... ‘ஒருவழியாக’... ‘போட்டுடைத்த விராட் கோலி’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய-ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக, ரோகித் சர்மா காயம் விஷயத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள், 3 டி20, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோகித் சர்தா காயம் சர்ச்சை குறித்து விராட் கோலி விளக்கியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், "துபாயில் தேர்வுக்குழு கூட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், ஐபிஎல் ஆடும்போது ஏற்பட்ட காயத்தினால் ரோகித்தால் விளையாட முடியாது என்று எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் சொல்லப்பட்டது. 2 வார கால ஓய்வு மற்றும் சிகிச்சை அவருக்குத் தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் காயத்தின் தன்மை என்ன என்பதும் ரோகித்திடம் விளக்கிச் சொல்லப்பட்டதாகவும், அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தச் செய்தி எங்களுக்கு வந்த பின் ரோகித் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடினார். அங்கிருந்து எங்களுடன் அவர் ஆஸ்திரேலியா வருவார் என்று நினைத்தோம். ஆனால், அவர் வரவில்லை. அவர் ஏன் எங்களுடன் பயணப்படவில்லை என்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை.
அதன் பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் என்றும், டிசம்பர் 11ஆம் தேதி மீண்டும் அவர் நிலை ஆய்வு செய்யப்படும் என்றும் மின்னஞ்சல் வந்தது. எனவே முதலில் அணித் தேர்வுக் கூட்டத்துக்கு முன்னால் வந்த மின்னஞ்சல், பின் ஐபிஎல் முடிந்த பிறகு நடந்த விஷயம், அதன்பின் இப்போது ஆய்வைப் பற்றிய மின்னஞ்சல் என இந்த விஷயத்தில் போதிய தெளிவு இல்லவே இல்லை. நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது சரி என்று நான் நினைக்கவில்லை" என்று விராட் கோலி தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், ரோஹித் சர்மாவும் இஷாந்த் சர்மாவும் ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவுக்குச் செல்லாமல் இந்திய அணியுடனே பயணப்பட்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம் என்று விராட் கோலி கூறியுள்ளார். "ரோகித்தும், இஷாந்தும் எங்களுடன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டிருந்தால் அவர் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு அதிகரித்திருக்கும்.
சாஹாவுக்கும் ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் எங்களுடன் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் டெஸ்ட் ஆட உடல் தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். இதேதான் ரோகித், இஷாந்த் விஷயத்திலும் நடந்திருக்கும். இப்போது அவர்களால் விளையாட முடியுமா இல்லையா என்பது பற்றியே தெளிவில்லாத நிலை இருக்கிறது" என்று விராட் கோலி கூறியுள்ளார்.