"அங்க என்னதான் யா நடக்குது??..." 'ரோஹித்' ஷர்மாவுக்கு தொடர்ந்து வைக்கப்படும் 'செக்'??... மீண்டும் வெடித்த 'சர்ச்சை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மா, காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால், பிசிசிஐ இந்திய அணியை அறிவித்த சில நாட்களிலேயே மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா களமிறங்கியது கடும் பரபரப்பை கிளப்பியது.
காயம் என்று ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கிய ஒரு வீரர் எப்படி உடனடியாக கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க முடியும் என்று பிசிசிஐ மீதும், ரோஹித் அணியில் இடம்பெறாமல் போனதற்கு கோலி காரணமாக இருக்கலாம் என்றும் பல சர்ச்சைகள் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கு பின் ரோஹித் ஷர்மா, 70 சதவீதம் உடல்நிலை தேறி வந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்ததாக தகவல் வெளியானது. ஐபிஎல் தொடருக்கு பின் அனைவரும் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், ரோஹித் ஷர்மா இந்தியாவிலுள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமி சென்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பதால் அவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது என்றொரு தகவல் கடந்த சில நாட்களாக வலம் வந்தது. இதனிடையே, தற்போது ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. நான்கு டெஸ்ட போட்டிகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியே களமிறங்கும். கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பவதால் அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
அப்படி ரோஹித் ஷர்மா ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாமல் போனால், பிசிசிஐ மீது கடும் அதிருப்தியை உருவாக்கும். தொடர்ந்து ரோஹித் ஷர்மா விவகாரத்தில் பிசிசிஐ வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காததால் சர்ச்சைகள் அதிகம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
