போன வருஷம் பரம எதிரி.. ஆனா, இந்த தடவ சீனே வேற.. ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், புதிய இரு அணிகளான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
புதிய அணிகள் என்பதால், இரு அணிகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் இருந்தது.
தொடர்ந்து, டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
அறிமுக போட்டியில் அரை சதம்
அதன்படி ஆடிய லக்னோ அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ராகுல் ஷமியின் முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு அடுத்தபடியாக, சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், தீபக் ஹூடா மற்றும் அறிமுக வீரர் ஆயுஷ் படோனி ஆகியோர், அரை சதமடித்து அசத்தினர்.
இலக்கை எட்டிய குஜராத் அணி
இருபது ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை லக்னோ அணி எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி வீரர்கள், சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தனர். இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் போட்டி முழுக்க விறுவிறுப்பு நிலவியது.
இதனால், புதிய அணிகளின் போட்டிகளும் இனிவரும் நாட்களில் நிச்சயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த ஒரு அசத்தல் சம்பவம் தான், தற்போது மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
போன வருஷம் பரம எதிரி
கடந்த ஆண்டு, பரோடா அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரில், க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இணைந்து ஆடியிருந்தனர். அப்போது கேப்டனாக இருந்த பாண்டியாவுக்கும், ஹூடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பாண்டியா மீது புகாரளித்த தீபக் ஹூடா, ராஜஸ்தான் அணிக்காக பின்னர் விளையாடினார்.
பாராட்டிய க்ருனால் பாண்டியா
எதிரிகளாக மாறிய க்ருனால் மற்றும் தீபக் ஆகிய இருவரையும், ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி எடுத்திருந்தது. இதனால், எதிரிகள் இருவரும் ஒரே அணியில் ஆடப் போவது பற்றி, ஏலத்தின் போதே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான், நேற்றைய போட்டியில் தீபக் ஹூடா அரை சதமடித்த போது, வெளியே இருந்த க்ருனால் பாண்டியா, அவரை பாராட்டினார்.
கட்டித் தழுவி பாராட்டு
தொடர்ந்து, தீபக் ஹூடா ஆட்டமிழந்து வெளியே வரும் போது, அடுத்து பேட்டிங் செய்ய சென்ற பாண்டியா, தீபக் ஹூடாவின் ஆட்டத்திற்கு தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களைக் கூறினார். இதே போல, லக்னோ அணி பேட்டிங் செய்த போது, முதல் ஓவரிலேயே சுப்மன் கில் அவுட்டானார். அவரது கேட்ச்சை தீபக் ஹூடா பிடிக்கவே, மறுகணமே அவரை கட்டித் தழுவி பாராட்டினார் க்ருனால் பாண்டியா.
கடந்த ஆண்டு பெரிதாக மோதிக் கொண்ட இரண்டு வீரர்கள், இந்த முறை ஐபிஎல் தொடரில் ஒரே அணியில் ஆடி, அனைத்தையும் மறந்து நட்பு பாராட்டும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.