6 வருசத்துக்கு அப்புறம் கே.எல்.ராகுல் இப்படி அவுட் ஆகியிருக்காரு.. புது டீமுக்கு கேப்டனா விளையாடிய ‘முதல்’ மேட்சே இப்படி ஆகிடுச்சே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் படோனி 54 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியை பொறுத்தவரை முகமது சமி 3 விக்கெட்டுகளும், வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளும் ரஷித் கான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகுல் தெவாட்டியா 40 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 33 ரன்களும், மேத்யூ வெயிட் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தான் சந்தித்த முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். முகமது சமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேயிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அணிக்கு கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே கே.எல்.ராகுல் டக் அவுட்டானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 வருடங்களுக்கு பின் டக் அவுட்டாகி வெளியேறுவது இதுவே முதல் முறை. கடந்த 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.