“இந்த பிரஷர்னால அந்த ப்ளேயரோட பையன் தன் பேரையே மாத்திட்டாரு”.. சச்சின் மகன் விஷயத்தில் கபில் தேவ் ‘முக்கிய’ அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅர்ஜூன் டெண்டுல்கரை அவரது தந்தை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது என கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 22 வயதான அர்ஜூன் டெண்டுல்கரை, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்களாக மும்பை அணியுடன் அர்ஜுன் பயணித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இறுதிவரை அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதுகுறித்து சச்சினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வீரர்களில் தேர்வில் தான் தலையிடுவதில்லை என்றும், அணி நிர்வாகம் சரியான நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்றும் சச்சின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கரை அவரது தந்தை சச்சினுடன் ஒப்பிடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சச்சின் டெண்டுல்கர் இமாலய சாதனைகளை கடந்த வீரர். அவருடைய சாதனைகளோடு ஒப்பிட்டு அர்ஜுன் டெண்டுல்கரை பார்க்கக்கூடாது. அர்ஜூன் டெண்டுல்கரை அவருடைய சுயமான பாணியில் விளையாட விட வேண்டும். சச்சின் சாதித்தவற்றில் 50 சதவீதத்தை சாதிக்க முடிந்தால் அது அர்ஜுனின் பெரிய சாதனையாக இருக்கும்’ என்று கபில் தேவ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘டெண்டுல்கரின் மகனாக அர்ஜூன் இருப்பதில் சாதகங்களும், பாதகங்களும் உள்ளது தன் தந்தை போலவே வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்ததால், அழுத்தம் தாங்க முடியாமல் டான் பிராட்மேனின் மகன் தனது பெயரையே மாற்றக் கொண்டார். அதனால் அர்ஜூனை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது’ என கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.