‘முதல் முதலில் இறுதிப் போட்டிக்கு போகும் ஐபிஎல் அணி!’.. ‘அடிச்சு துவம்சம் பண்ணி’ அடுத்த கட்டத்துக்கு போன வீரர்!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், 2-வது குவாலிஃபையர் சுற்றில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் 78 ரன்களும், ஹெட்மையர் 42 ரன்களும், ஸ்டாய்னிஸ் 38 ரன்களும் எடுத்து 20 ஓவர் முடிவுகளுக்கு 189 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் 189 ரன்கள் எனும் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 2 ரன்களில் வெளியேற, தொடக்கத்தில் சில முக்கிய விக்கெட்டுகள் சரிந்தாலும், வில்லியம்சனும், அவருடன் களத்தில் நின்ற சமத்தும் அதிரடியாக ஆடினர்.
17 ஆவது ஓவரில் வில்லியம்சன் அவுட்டாக மீண்டும் அணியில் பரபரப்பு ஏற்பட்டது. 3 ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலையில், சமத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, 19 ஆவது ஓவரில் சமத், ரஷித், கோஸ்வாமி ஆகியோர் அடுத்தடுத்து பந்துகளில் அவுட்டாகினர். இதனால் டெல்லி அணியின் வெற்றி உறுதியானது. இந்த போட்டியுடன், அதிக பவுண்டரிகளை விளாசிய பட்டியலில் ஷிகர் தவான் முன்னேறியுள்ளார்.
ஆக, 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக நுழைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி வரும் நாளை (நவ 10 ஆம் தேதி) மும்பை அணியை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கிறது.