"வசதி இல்லாம..வெறுங்காலோட தான் ட்ரைனிங் பண்ணிருக்கேன்".. விருது மேடையில் நடராஜன் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு நீயா நானா விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய பல அனுபவங்கள் மற்றும் கனவுகள் குறித்து பேசியிருக்கிறார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். 2020 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார் நடராஜன். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தற்போது ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார். இதுவரையில் 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடராஜன், தனது பெயரில் கிரிக்கெட் அகாடமியை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் துவங்க உள்ளார். இதற்காக சில நாட்களுக்கு முன் நடராஜன் தனது கிராமத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புல் தரை பிட்ச அமைக்கும் பணிகளில் கிராமத்தினருடன் சேர்ந்து ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வருடம் நடராஜனுக்கு நீயா நானா விருது அளிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் பேசும் நடராஜன்,"இந்த மாதிரி ஸ்டேஜ்-ல என் வாழ்க்கையில வாங்குற முதல் அவார்ட் இது. நான் அரசு பள்ளியில் தான் படிச்சேன். வசதி இல்லாம வெறும் காலோட பயிற்சி செஞ்சிருக்கேன். இப்போ போனாலும் அங்க தான் விளையாடுவேன். பழசை மறக்க மாட்டேன். ஏன்னா அங்க இருந்துதான் வந்தேன். சிட்டி-ல நிறைய இடத்துல அகாடமி ஆரம்பிச்சிட்டு தான் இருக்காங்க. அங்க இருக்கவங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனா கிராமத்துல இருக்கவங்களுக்கு அப்படி இல்ல. என்னால முடிஞ்ச ஒரு வழிகாட்டும் நோக்கத்துல தான் கிரிக்கெட் அகாடமியை ஆரம்பிச்சோம்." என்றார்.
மேலும், தன்னுடைய கிரிக்கெட் அகாடமி மூலமாக பயனடைந்த வீரர்கள் குறித்து பேசிய அவர்,"அது மூலமாக 3 பேர் தமிழ்நாடுக்காக விளையாடி இருக்காங்க. இப்போ 3 பேர் TNPL விளையாடுறாங்க. சென்னை லீக்-ல ஒரு 15 பேர் விளையாடுறாங்க. என் வாழ்க்கையில நான் கத்துக்கிட்டது 4 விஷயங்கள் தான். அது தன்னம்பிக்கையா இருக்கணும். விடாமுயற்சியா இருக்கணும். கடினமா உழைக்கணும். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தன்னடக்கத்தோட இருக்கணும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
Welcome சின்னப்பம்பட்டி நடராஜ்.. 🤩🥳
நீயா நானா விருதுகள் 2022 - நாளை மதியம் 11:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #NeeyaNaanaViruthugal #VijayTelevision pic.twitter.com/LSKh5s2Yrl
— Vijay Television (@vijaytelevision) December 31, 2022