மறுபடியும், மறுபடியும் சொல்றேன் கப்பை ஜெயிக்கப்போறது அவங்கதான்.. அடிச்சு சொல்லும் பிரெட் லீ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதி சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து நேற்று நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி உறுதி செய்துவிட்டது. ஆனால் இந்தியா ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வி பெற்றுள்ளதால், இனி வரும் போட்டிகளில் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee), நடப்பு டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மறுபடியும் சொல்கிறேன், இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆமாம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற பவுலர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அன்றைய நாள் பாகிஸ்தானின் நாளாக அமைந்துவிட்டது.
அதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை குறை சொல்ல முடியாது. அன்றைக்கு இந்தியாவுக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். விராட் கோலி சிறப்பாக விளையாடினார். கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் விளையாடிய விதத்தை யாரும் மறந்துவிட முடியாது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு, கோப்பையை இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் என நினைக்கிறேன்’ என பிரெட் லீ கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
