‘மேட்ச் ஜெயிச்சும் இப்படி ஒரு சோதனையா..!’.. இந்திய அணிக்கு ‘அபராதம்’ விதித்த ஐசிசி.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களுக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 17.5 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசியின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பந்து வீசியதாக இந்திய அணி மீது அம்பயர் ஜவகல் ஸ்ரீநாத் புகார் அளித்தார். இதனை அடுத்து பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்துக்காக ‘ஓவர் ஷார்ட்’ என்ற விதிமுறைப்படி கேப்டன் விராட் கோலி மற்றும் அந்த போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களுக்கும் அப்போட்டியின் ஊதியத்திலிருந்து 20 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.