ரோஹித் சரிபட்டு வரமாட்டாரு.. டெஸ்ட் கேப்டன் பதவியை அந்த பையனுக்கு கொடுக்கலாம்.. புது ட்விஸ்ட் வச்ச கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்புக்கு ரோஹித் ஷர்மா சரியாக இருக்க மாட்டார் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.
இதனால் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட உள்ளார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக உள்ளார். அதனால் டெஸ்ட் அணிக்கும் அவரே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோஹித் ஷர்மா சரியாக இருக்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ரோஹித் ஷர்மாவிடம் உடற்பகுதி குறித்த பிரச்சனைகள் உள்ளது. எல்லா போட்டிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு வீரர் தான் நமக்கு தேவை. உங்களுக்கு நினைவிருக்கிறதா இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸிக்கு தொடைப்பகுதியில் இதை பிரச்சனை இருந்தது. நீங்கள் வேகமாக ஓட முயற்சிக்கும்போது அல்லது சீக்கிரமாக சிங்கிள் எடுக்க முயற்சிக்கும் போது மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் புதிதாக ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ரோஹித் ஷர்மாக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டாம் என நினைக்கிறேன்’ என சுனில் கவாஸ்கர் கூறினார். மேலும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்கலாம் என அவர் கருத்து தெரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘கேப்டனின் கைகள் கட்டப்படுவது எந்த கிரிக்கெட் வாரியம் விரும்பாது. சவுரவ் கங்குலியும் கேப்டனாக இருந்துள்ளதால் இந்திய கேப்டனை தொந்தரவு செய்ய அவர் நினைக்க மாட்டார். சில சமயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஏதும் நடக்கும் என என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணியில் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்கு ஒரு நல்ல அணி இருந்தது. சிறந்த அணி இருந்தால் முடிவுகள் நல்ல பலனைத் தரும்’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.