கேப்டன் பதவி'ல இருந்து மாறுனா மட்டும் போதாது.. கோலி அந்த 'ஈகோ'வ விட்டே ஆகணும்.. பறந்த முக்கிய அட்வைஸ்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து தான் விலகப் போவதாக அறிவித்தது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மறுதினமே, தான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியின் இந்திய கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிய நிலையில், இப்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியது, அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
விராட் கோலி சாதனைகள்
இந்திய அணி டெஸ்ட் கண்ட டெஸ்ட் கேப்டன்களில், அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனை கோலியிடம் தான் உள்ளது. இவரது தலைமையில், 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, அதில் 40 வெற்றிகளை பெற்று, சாதனை புரிந்துள்ளது. மேலும், இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகள் ஆடிய பெருமையும் விராட் கோலியிடம் தான் உள்ளது.
பரபரப்பு
அது மட்டுமில்லாமல், வெளிநாட்டிற்குச் சென்று, வரலாற்று சிறப்பு மிக்க, பல டெஸ்ட் வெற்றிகளையும் இந்திய அணி கோலியின் தலைமையின் கீழ் தான், தங்களின் வசமாக்கியது. இப்படிப்பட்ட பல்வேறு தரப்பிலான சாதனைகளைக் கொண்ட கேப்டன், திடீரென அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது, சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடும் சர்ச்சை
டி 20 உலக கோப்பைக்குப் பிறகு, அதன் கேப்டன் பதவியில் இருந்து தானே விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக, அவரை ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து, பிசிசிஐ விலக்கியது, கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
நெருக்கடி
இதன் மூலம், விராட் கோலி அதிகம் மனம் நொந்து போனார் என்றும் தெரிகிறது. மறுபக்கம், சிறப்பான பல இன்னிங்ஸ்களை சமீபத்தில் அவர் கொடுத்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சதம் கூட சர்வதேச போட்டியில் அவர் அடிக்கவில்லை என்பதும் ஒரு பக்கம் உள்ளது. இதனால், பேட்டிங் நெருக்கடி காரணமாக, அவர் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பலவித கருத்து
இதனைத் தொடர்ந்து, விராட் கோலியின் முடிவுக்கு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இனி சுதந்திரமாக ஆடலாம்
'டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலியின் முடிவை நான் வரவேற்கிறேன். டி 20 கேப்டன்சி பதவியை அவர் துறந்ததில் இருந்தே, கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். அது அவரின் செயல்பாடுகளில் தெளிவாக தெரிந்தது. இதனால், அவர் டெஸ்ட் கேப்டன்சி இருந்து விலகுவதாக அறிவித்த முடிவு, இனி அவரை சுதந்திரமாக ஆடச் செய்யும்.
ஈகோவை விட வேண்டும்
விராட் கோலிக்கு அதிக பக்குவம் உள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன், அவர் பல முறை நிச்சயம் யோசித்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன். ஒருவேளை, அவருக்கு கேப்டன்சி பிடிக்காமல் போயிருக்கலாம். இருந்தாலும், அவரை நாம் ஆதரித்து, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும், இனி இளம் கிரிக்கெட் வீரர்கள் கீழ் விளையாடும் போது, ஈகோவை விட்டு விட்டு, கோலி ஆட வேண்டும்.
பக்கபலமாக இருக்கணும்
ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதீன் தலைமையில், நான் எந்தவித ஈகோவும் இன்றி ஆடினேன். அதே போல, கோலியும் ஆடினால், அது அவருக்கும், இந்திய அணிக்கும், உதவி செய்யும். அது மட்டுமில்லாமல், புதிய கேப்டன் மற்றும் அணி வீரர்களுக்கு, கோலி பக்கபலமாக இருக்க வேண்டும். விராட் கோலி என்னும் பேட்ஸ்மேனை நாம் இழந்து விடக் கூடாது' என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.