‘சூதாட்ட புகாரில் சிக்கி சஸ்பெண்டான கேப்டன்’.. ‘புதிய கேப்டனான சுழற்பந்து வீச்சாளர்’.. ஐசிசி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 17, 2019 04:43 PM
சூதாட்ட புகாரில் சிக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரயிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் 14 அணிகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சூதாட்டச் சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த அணியின் கேப்டன் முகமது நவீத் மற்றும் ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகிய 3 வீரர்கள் மீது புகார் வந்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் உட்பட 3 பேரை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று நாளை நடைபெறும் நிலையில் கேப்டன் உட்பட 3 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.