‘பவுண்டரிகளின் அடிப்படையில்’... ‘இனி அரை மற்றும் இறுதிப் போட்டி முடிவு இல்லை’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Oct 15, 2019 12:29 PM
பரபரப்பாக நடைப்பெற்ற 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி இரு அணிகளும், கடுமையாக போராடி விளையாடியநிலையில், போட்டி ‘டை’ -யில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் பரபரப்பாக நடைப்பெற்றது. யாரும் எதிர்பாராதவகையில், அந்தப் போட்டியும் ‘டை’ ஆனது.

இதையடுத்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றதாக அந்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், துபாயில் ஐசிசி-யின் கூட்டம் நடைப்பெற்றது. இதில், சர்வதேச கிரிக்கெட்டில், சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி,
ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப் போட்டியில், சர்ச்சைக்குள்ளான பவுண்டரிகளின் அடிப்படையில் போட்டி முடிவு என்ற முறையை, ஐசிசி நீக்கம் செய்துள்ளது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி உலகக் கோப்பை 20 மற்றும் 50 ஓவர் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் 'டை'-யில் முடிந்தால், ஓர் அணியின் வெற்றியை உறுதி செய்யும் வரை மீண்டும், மீண்டும் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ஐசிசி-யின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
