2011 WC அப்பறம்.. எங்கள USE AND THROW மாதிரி நடத்துனாங்க.. இந்திய கிரிக்கெட்டின் சோக கதை.. புலம்பிய ஹர்பஜன் சிங்.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் தேர்வாளர்கள் குறித்து, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், கடந்த டிசம்பர் மாதம், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும், தனது ஒய்வு முடிவினை அறிவித்திருந்தார்.
23 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த ஹர்பஜன் சிங், டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, பல அபார சாதனைகளையும் படைத்துள்ளார்.
பிசிசிஐ மீது பழி
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்து வந்த அவர், இறுதியில் ஒய்வு முடிவினை அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளில், குறுகிய காலத்தில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை எடுத்த போதும், இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என பிசிசிஐ தேர்வாளர்கள் மீதும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பரபரப்பு கருத்து
அதே போல, தன்னை வேண்டுமென்றே பிசிசிஐ புறக்கணித்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு கருத்தினை, ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 'கடந்த 2011 ஆம் ஆண்டு, உலக கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி, அதன் பிறகு ஒரு போட்டியில் கூட இணைந்து ஆடவில்லை. கோப்பையை வெல்ல தகுதி உடைய நாங்கள், ஏன் மீண்டும் இணைந்து ஆட வழி கிடைக்கவில்லை?. அதன் பிறகு, அந்த அணி திடீரென மோசமானதாக அமைந்து விட்டதா?.
Use and Throw
அந்த சமயத்தில், 31 வயது ஹர்பஜன் சிங், 30 வயது யுவராஜ் சிங், 32 வயது விரேந்தர் சேவாக், 29 வயது கவுதம் கம்பீர் என 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆடிய வீரர்கள், 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆட போதுமான தகுதி இல்லாமல் போய் விட்டார்களா?. ஏன் ஒன்றன் பின் ஒருவராக, அணியில் இருந்து நீக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்?. ஏன் நாங்கள் அனைவரும் 'Use and Throw' போல நடத்தப்பட்டோம்?.
சோகமான பகுதி
இந்திய கிரிக்கெட்டின் சோகமான பகுதி இது. இப்போது என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், 2011 ஆம் ஆண்டு, எனக்கு நிறைய பேர் உதவி செய்தார்கள். நிறைய பேர், எனது காலை வாரியும் விட்டார்கள். ஆனால், 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு, என்னை முழுவதுவாகவே தூக்கி எறிந்து விட்டார்கள்.
கிரிக்கெட் போட்டி
31 வயதில், நான் 400 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். 31 வயதாகும் ஒருவர், ஒரே ராத்திரியில், 400 விக்கெட்டுகளை அள்ளி விட முடியாது. அவர் ஏதாவது சிறந்ததாக செய்திருக்க வேண்டும். நான் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வென்று கொடுத்திருக்கிறேன். அதே போல, சில போட்டிகளில் மோசமாகவும் ஆடியுள்ளேன். அப்படி தான் விளையாட்டு இருக்கும்.
கேப்டன் கூட கூறவில்லை
400 விக்கெட்டுகள் எடுத்த ஒருவர் லெஜண்ட் என அழைக்கப்படும் அதே வேளையில், 400 விக்கெட்டுகளை எடுத்த நான், எந்த விளக்கமும் இல்லாமல், அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். பிசிசிஐயும், தேர்வாளர்களும் எனக்கு பதில் அளிக்கவில்லை. அணியின் கேப்டன் கூட, என்ன நடந்தது என்பதை தெரிவிக்கவில்லை.
கடும் விமர்சனம்
அப்போது, என்ன நடந்தது என்பது பற்றி, எனக்கு தற்போது வரை ஒன்றும் தெரியவில்லை. இவ்வளவு பெரிய வீரரை நீங்கள் இப்படி நடத்தினால், எந்த வீரருக்கும் எதுவும் நடக்கலாம் என்பதையே அது காட்டுகிறது' என ஹர்பஜன் சிங் மீண்டும் ஒரு முறை, பிசிசிஐ மற்றும் அதன் தேர்வாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.
கேப்டன் கூட தனக்கு பதில் தெரிவிக்கவில்லை என ஹர்பஜன் சிங் குறிப்பிட்ட சமயத்தில், இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.