“ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு மன்னிப்பு கேட்டோம்”.. கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சண்டை.. ஹர்பஜன் சிங் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உடன் ஏற்பட்ட சண்டை சமாதானத்தில் முடிந்தது குறித்து ஹர்பஜன்சிங் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையில் விளையாடியது. அப்போது சிட்னியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரங்கு என திட்டியதாக புகார் எழுந்தது. இது அப்போது மிகப் பெரும் சர்ச்சையானது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அம்பயரிடம் புகார் செய்ததை அடுத்து, ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதித்தால், ஆஸ்திரேலியா தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புவோம் என பிசிசிஐ கிடுக்கிப்பிடி போட்டது. அதனால் வேறு வழியின்றி ஹர்பஜன் சிங் மீதான தடை நீக்கப்பட்டது. இது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக மாறியது.
இதன் பின்னர் இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் தற்போது மனம் திறந்துள்ளார். அதில், ‘நாங்கள் சண்டிகரில் இருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த தொடரில் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடி முடித்ததும், எனது நண்பரின் இடத்திற்கு இருவரும் சென்றோம். அங்குதான் நாங்கள் முதல் முறையாக கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டோம். இந்த பிரச்சனையை முன்பே சுமூகமான முறையில் தீர்த்திருக்கலாம் என்று நாங்கள் அப்போது உணர்ந்தோம். இந்த சம்பவத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பலரும் போட்டோ எடுத்தனர்’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘முதல் முறையாக மும்பை அணி எங்களை ஒன்றாக தேர்வு செய்தபோது எதற்காக இப்படி செய்தார்கள் என்று நினைத்தேன். சைமண்ட்ஸ் உடன் எப்படி இணைந்து விளையாடப் போகிறோம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் என் மீது கோபத்துடன் இருப்பார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினோம். அந்த சமயத்தில் எங்களுக்கு இடையே சண்டை இருந்ததாக ஊடகங்கள் எழுதின. ஆனாலும் மும்பை அணிக்காக விளையாடும் போது எங்களுக்குள் முன்பு எந்தவித சண்டையும் ஏற்படவில்லை என்பது போலவே உணர்ந்தோம்’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.