'ஊக்கமருந்தை உட்கொண்டாரா கோமதி?'.. 'சகோதரர் கூறும் விளக்கம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 22, 2019 11:41 AM

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக வரும் செய்தி தவறானது என்று தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gomathi Marimuthu \'s brother says, Gomathi has never doped in her life

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் வந்து தங்கப் பதக்கம் வென்றார். 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 விநாடிகள் நேரத்தில் வந்து முதலிடம் பிடித்திருந்தார். இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்ற கோமதி மாரிமுத்துவை, தமிழகத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில், ‘தோஹாவில் ஆசிய தடகளப் போட்டி நடந்த சமயத்தில் கோமதி மாரிமுத்துவிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் மாதிரியில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார் என்று நிரூபணம் ஆகியுள்ளது. ஊக்க மருந்து தொடர்பாக மேற்கொள்ளபட்ட ‘ஏ’ சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ’பி’ சோதனையிலும் பாசிட்டிவ் என்று வரும் நிலையில் கோமதிக்கு 4 வருட காலம் தடை விதிக்கப்படும்.

அவர் வாங்கிய தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும். போலந்தில் இந்திய தடகள வீராங்கனைகளுடன் கோமதி பயிற்சி பெறுவதாக இருந்தது. அது தடை செய்யப்படும்' என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, ‘இந்த குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில்தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுப்படுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். இந்த தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள். அதுபற்றி, என்னிடம் ஏன் கருத்து கேட்கவில்லை.

என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன். ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. பயிற்சிக்காக நான் போலந்து செல்வதிலும் எந்தச் சிக்கலும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று  தெரியவில்லை  என்று கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இதுவரை கோமதி எந்த ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை என்றும் சுப்ரமணி தெரிவித்துள்ளார். சக இந்திய வீராங்கனைகளுடன் போலந்தில் பயிற்சி பெற, தற்போது கோமதி மாரிமுத்து தயாராகி வருகிறார் என்றும், அதற்கான ஆயத்த பணிகளில் கோமதி மாரிமுத்து ஈடுபட்டுள்ளார் என்றும் கோமதியின் சகோதரர் சுப்ரமணி கூறியுள்ளார்.

Tags : #GOMATHIMARIMUTHU #DOPED