தங்க மங்கை கோமதிக்கு பரிசுத் தொகை.. தி.மு.க., தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 27, 2019 04:45 PM
ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் சென்ற திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார். திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி.
பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம். இத்தகைய ஏழ்மையான நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பல்வேறு தரப்பினரும் பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் இந்த இருவரும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேபோல், 'தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.