"அதுக்கு எல்லாம் வாய்ப்பில்ல ராஜா..." 'கங்குலி' எடுத்துள்ள முடிவால்... 'தோனி'யின் மாஸ்டர் பிளானுக்கு எழுந்துள்ள 'சிக்கல்'??!!... என்ன செய்யப் போறாரு 'தல'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ள நிலையில், அடுத்த சீசனில் அணியில் பல மாற்றங்கள் செய்து களமிறங்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை அணியில் பல வயதான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களை மாற்றி விட்டு அடுத்த ஆண்டு பல வீரர்களை புதிதாக அணியில் எடுக்க முடிவு செய்துள்ளது. அணியின் கோர் ஃகுரூப் ஒன்றை உருவாக்க போவதாக அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இந்த முறை கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என தகவல் பரவி வருகிறது.
அது மட்டுமில்லாமல், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஏலம் நடைபெறும் என்பதைத் தான் சென்னை அணி மலை போல நம்பியுள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலியின் சமீபத்திய பேட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன் பெரிய அளவில் ஏலம் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
அடுத்த வருட ஏலம் குறித்து எதுவும் ஆலோசனை செய்யவில்லை. அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதலில் இந்த சீசனை பார்க்கலாம் என கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டிற்காக பெரிய அளவில் ஏலம் நடத்த வாய்ப்பில்லை என கங்குலி நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அடுத்த ஆண்டுத் தொடரை சாதாரணமாக நடத்தி விட்டு 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் ஏலத்தை நடத்தவும் கங்குலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதற்கு முன் பெரிய அளவில் ஏலம் நடைபெற வாய்ப்பில்லை.
இதனால், அடுத்த ஆண்டு அணியில் பெரிய மாற்றத்துடன் களமிறங்க காத்திருக்கும் சென்னை அணிக்கு ஏலம் பெரிதாக நடைபெறாமல் போனால் அது மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 2 அல்லது 3 வீரர்கள் வேண்டுமானால் சென்னை அணியில் புதிதாக இடம்பெறலாம். மற்றபடி கேப்டன் தோனியின் கோர் ஃகுரூப் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் என்றே தெரிகிறது.

மற்ற செய்திகள்
