முக்கியமான ஆல்-ரவுண்டரே… நீங்களே இப்படிப் பண்ணலாமா..? ‘ஒழுங்கா பயிற்சி எடுத்தா ‘இவர்’ மீண்டு வரலாம்..!’- கம்பீர் கொடுக்கும் புது நம்பிக்கை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்- ரவுண்டர் ஆக இருந்த ஒருவர் சரியாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டால் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முன்னாள் வீரரான கம்பீர். மேலும், இந்திய அணி தனக்கான சிறந்த ‘ஆடும் 11’ வீரர்களைக் கண்டுகொள்ளவும் யோசனை கூறியுள்ளார் கம்பீர்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து தொடர்ந்து இந்திய அணியின் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஆக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து பந்துவீச தொடங்கினாலே மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கவுதம் கம்பீர்.
ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அமைந்த போது எல்லாம் அவரது உடற்தகுதி பிரச்னையாக முன் எழுந்து வந்தது. இதனால், அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, ஒரு கட்டத்தில் இந்திய அணியின் ‘ஆடும் 11’ வீரர்களுள் 6-ம் வீரருக்கான தேடுதலை தொடங்க வைத்துவிட்டார். ஹர்திக் பாண்டியா ஃபார்மில் இல்லை என்று பலரும் உறுதி செய்துவிட்டனர் என்கிறார் கம்பீர்.
மேலும் கம்பீர் கூறுகையில், “இந்திய அணியில் 6-ம் வீரர் ஆகக் களம் இறங்க ஒரு வீரர் தேவைப்படுகிறார். ஒரே நாளில் அந்த இடத்துக்கான வீரரை உறுதி செய்துவிட முடியாது. அந்த இடத்துக்கான வேலையை ஹர்திக் பாண்டியா நிறைவேற்றுவார் என்றும் இனிமேல் நம்ப முடியாது. அவரை ஏற்கெனவே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், தொடர்ந்து பயிற்சி எடுத்து தன்னை ஃபிட் ஆக ஹர்திக் வைத்துக் கொண்டால் அணிக்குத் திரும்ப வாய்ப்பு உண்டு.
தொடர்ந்து பந்துவீச்சில் பயிற்சி எடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் வயது இருக்கிறது. அதனால், பயிற்சியும் ஃபிட்னஸும் தான் தேவைப்படுகிறது. ஆனால், 6-ம் வீரருக்கான இடத்தில் இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் புதிய வீரருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு புது வீரரை களம் இறக்கினால் வீரர்களின் உண்மையான திறன் தெரியாமலேயே போய்விடும்.
பின்னர், இந்திய அணிக்கான சிறந்த ‘ஆடும் 11’ வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருக்கும். நம் நாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மாற்று நிச்சயமாக இருக்கிறது. ஆனால், ஒரு வீரரை களம் இறக்கினால், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து கால அவகாசம் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.