"எப்போ பார்த்தாலும் ‘அப்படி’ கூப்டறது ஒரு ஃபேஷன் ஆய்டுச்சுல உங்களுக்கெல்லாம்..?"- யாரை விளாசுகிறார் டிராவிட்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆக பொறுப்பு எடுத்துள்ளார் ராகுல் டிராவிட். டிராவிட் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுகிறது.

புதிய பயிற்சியாளர் ஆக டிராவிட்டும் அணியின் புதிய கேப்டன் ஆக ரோகித் சர்மாவும் நேற்று இணைந்து அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல விதமான கேள்விகளுக்கும் ரோகித், டிராவிட் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இதில் ஒரு கேள்வியாக ராகுல் டிராவிட்டிடம், “இந்திய அணியை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதானமாக பதில் அளித்த டிராவிட், நியூசிலாந்து அணியை சிறந்த கிரிக்கெட் அணியாக புகழ்ந்தார்.
மேலும் டிராவிட் கூறுகையில், “கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியினர் மிகச்சிறந்தவர்கள். அவர்களை தாழ்வாக பார்ப்பது அவர்களை தாழ்த்தி அழைப்பது என்பது சில காலமாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. நியூசிலாந்து அணியினர் 2015 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக்கோப்பை 2021 என பல சர்வதேச போட்டிகளில் தங்களது திறன் என்ன என்பதை நிருபித்துள்ளனர்.
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அத்தனை அணிகளுக்கும் நிச்சயமாகத் தெரியும் அவர்கள் எவ்வளவு பலசாலிகள் என்று. அவர்களை தாழ்வாக அழைப்பது ஒரு வித ஃபேஷன் ஆகிவிட்டது. இனியும் அந்த நிலை தொடராது. காரணம், அவர்கள் நிஜத்தில் பலம் வாய்ந்த அணிதான். நான் அவர்களை ஒரு சிறந்த அணியாகத்தான் பார்ப்பேன். கடந்த சில ஆண்டுகளாக அவர்களது ஆட்டம் நன்றாகவே மெருகேறி உள்ளது. வெளியில் இருப்பவர்கள் அந்த அணியை குறைத்து மதிப்பிடலாம். ஆனால், அவர்கள் விளையாடும் எந்த கிரிக்கெட் தொடர் என்றாலும் நிச்சயமாக டாப் ஆர்டரில் நிற்பார்கள்.
நியூசிலாந்து அணி நன்றாகவே வழிநடத்தப்படுகிறது. போட்டிகளுக்கு அவர்கள் சிறப்பாகவே தயார் ஆகியுள்ளார்கள். சமீபத்திய போட்டிகளில் அவர்கள் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். அப்படிபட்ட சூழலில் இந்த டி20 போட்டிகள் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்திய அணி இன்னும் மெருகேற இந்த டி20 போட்டித் தொடர் உதவும்” என்றார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளின் அதிரடி ஆட்டக்காரர்கள் ஆன விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவருமே தற்போதைய டி20 தொடரில் பங்கேற்காமல் ஓய்வு எடுக்கின்றனர். டி20 முடிந்த உடன் தொடங்கும் டெஸ்ட் தொடரில் மீண்டும் இருவரும் தத்தமது அணிகளில் வந்து இணைந்து கொள்கிறார்கள்.

மற்ற செய்திகள்
