‘அவர் அத சொல்லலன்னா அவுட் ஆகிருக்க மாட்டேன்’.. தோனி மீது ‘பழிசுமத்திய’ பிரபல இந்திய வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Nov 18, 2019 02:03 PM
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் சதமடிக்க இருப்பதை தோனி நினைவுபடுத்தாமல் இருந்திருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டேன் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது எம்.பி.யாக உள்ள கௌதம் கம்பீர் சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதத்தை தவறவிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த கம்பீர், “2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஏன் சதத்தை தவறவிட்டோம் என பலமுறை என்னை நானே கேட்டிருக்கிறேன்.
களத்தில் இருந்த எனக்கு நான் 97 ரன்கள் எடுத்திருந்ததே தெரியாது. என்னுடைய தனிப்பட்ட ஸ்கோர் பற்றி நான் நினைக்கவும் இல்லை. என் இலக்கு இலங்கையை வெல்ல வேண்டும் என்பதிலேயே இருந்தது. அப்போது தோனிதான் என்னிடம், நீங்கள் இப்போது 97 ரன்களில் இருக்கிறீர்கள். சதம் அடிக்க இன்னும் 3 ரன்கள்தான் இருக்கிறது என்றார்.
தோனியிடம் இருந்து அந்த வார்த்தைகள் வரும்வரை எனக்கு எந்த பதற்றமும் இல்லை. அதன்பிறகே இன்னும் 3 ரன்கள் தேவை என்ற அழுத்தம், விருப்பம் எனக்குள் வேகத்தை ஏற்படுத்த பதற்றத்தில் நான் ஆட்டமிழந்தேன். ஒருவேளை தோனி அதை சொல்லாமல் இருந்திருந்தால் என்னால் எளிதில் சதம் அடித்திருக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
