‘தோனி என்ற ஒற்றை சொல்’!.. மிரண்டுபோன இங்கிலாந்து வீரர்கள்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் கடைசி கேப்டன்ஷி ஆட்டம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த 3 கோப்பையையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனியின் கேப்டன்ஷி போட்டியை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
அந்த சமயம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடருக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடருக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டத்துக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்திய அணிக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதன்படி, மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் முதல் பயிற்சி ஆட்டம் தொடங்கியது. பொதுவாக பயிற்சி ஆட்டத்தில் மைதானம் காலியாகவே இருக்கும். இலவச அனுமதி என்றாலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அன்று அப்படி இல்லை. தோனியின் கேப்டன்ஷியை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வர தொடங்கினர்.
இதனால் போட்டி நடந்த மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனை அடுத்து உடனடியாக மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதல் 5 ஓவர்களுக்குள் மைதானத்தின் 2 பகுதிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. அப்போது மைதானத்தின் மேற்கு வாயில் கட்டுமான பணிகளுக்காக மூடி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த வாயில் திறக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.
அப்போட்டியின் 10 ஓவர்களுக்குள் மைதானம் முழுமையாக நிரம்பிவிட்டது. ஒரு பயிற்சி ஆட்டத்துக்கு 15,000-க்கும் அதிகமான ரசிகர்கள் கூடியதைக் கண்டு இங்கிலாந்து வீரர்களே ஆச்சரியம் அடைந்தனர். குறிப்பாக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய எழுந்த சத்தம் அரங்கத்தையே அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தோனி தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவரது பல சாதனைகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.