எனக்குள்ள இருக்குற 'வேதனை'ய சொல்றதுக்கு 'வார்த்தை' இல்ல...! 'எல்லாம் முடிஞ்சு போச்சு...' இனி என்ன பண்ண முடியும்...? - ரிஷப் பண்ட் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 2-வது குவாலிபயர் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் நேற்று (13-10-2021) நடந்தது.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கொல்கத்தா அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்ரேயஸ் ஐயர் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், முதல் ஓவரில் இருந்தே டெல்லி அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அடுத்ததுவந்த நிதிஷ் ராணா (13), தினேஷ் கார்த்திக் (0), இயன் மோர்கன் (0) போன்ற வீரர்கள் வந்த வேகம் தெரியாமல் வெளியேறினர். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஓவரை வீசிய ரவிச்சந்திர அஸ்வின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். திரில்லர் மேட்சாக மாறிய நிலையில் ராகுல் திரிபாதி 5-வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கொல்கத்தா அணியுடனான தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தனது வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது என உருக்கமாக கூறியுள்ளார்.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், “வார்த்தைகளால் எனது வேதனையை வெளிப்படுத்த முடியாது, ஆனால் போட்டி முடிந்தபிறகு பேசி பயன் இல்லை, நம்மால் இனி எதையும் மாற்ற முடியாது. எங்களால் முடிந்த வரைக்கும் சிறப்பாக போராடினோம். பவுலர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர். ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. கொல்கத்தா வீரர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களுக்கு பிறகு கொல்கத்தா அணி மிகசிறப்பாக பந்துவீசியது. இந்த தொடரில் தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீண்டெழுந்து நம்பிக்கையுடன் அடுத்த தொடரில் விளையாடும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.