‘இவரை மாதிரி ப்ளேயர் எல்லாம் ஒரு தலைமுறைக்கு ஒருத்தர் தான் வருவாங்க’!.. கோலி மீது விழுந்த விமர்சனத்துக்கு ‘பதிலடி’ கொடுத்த முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் குரல் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதனால் இப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களின் ஆட்டம் கடுமையான விமர்சனத்துகுள்ளாகி வருகிறது. குறிப்பாக கேப்டன் விராட் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் கோலி எடுத்த ஒரு முடிவு தோல்விக்கு காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், கடைசி நாளான ரிசர்வ்டே ஆட்டத்தின் ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கோலி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை மறுத்த துணைக்கேப்டன் ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலில் டிரா செய்யப் பார்ப்போம் என ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் இதை கோலி நிராகரித்ததாக தெரிகிறது.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஆலோசனை ஒன்றை வழங்கியிருந்தார். அதில், கடைசி நாள் ஆட்டத்தில் முதல் 10 ஓவர்கள்தான் வெற்றி தீர்மானிக்கும் என்றும், அதனால் கவனமாக விளையாட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால் ரிசர்வ்டே ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விராட் கோலியும், புஜாராவும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் அடுத்து களமிறங்கிய வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படவே, அனைவரும் வந்தே வேகத்தில் ஆட்டமிழந்தனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் விராட் கோலியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அதில், ‘விராட் கோலி மிகச்சிறந்த வீரர், நல்ல கேப்டன். நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உணர்ச்சிவசப்படக்கூடாது. உண்மையிலேயே விராட் கோலி தனது வேலையை சரியாக செய்துள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை நிறைய போட்டிகளில் விளையாட விளையாட தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விவி ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி உள்ளார். நாளுக்கு நாள் ஒரு கேப்டனாக அவரது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். இதுபோன்ற வீரர்கள் ஒரு தலைமுறைக்கு ஒருவர்தான் உருவாகின்றனர்’ என கூறி விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு மொஹிந்தர் அமர்நாத் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
