லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும் சிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் 61 ரன்களும், எவின் லூயிஸ் 55 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி இப்போட்டியில் சாதனை ஒன்றை படித்துள்ளார். அதில் லக்னோ அணியின் விக்கெட் கீப்பர் டி காக் அடித்த பந்தை கேட்ச் பிடித்து தோனி அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 200 கேட்சுகளை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
அதேபோல் நேற்றைய போட்டியில் 7-வது வீரராக களமிறங்கிய தோனி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். மொத்தம் 6 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
