"அடுத்த 'சீசன்'ல ரெய்னா 'சிஎஸ்கே' 'டீம்'க்கு ஆடுவாரா? மாட்டாரா?..." வெளியாகியுள்ள முக்கிய 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது.

ஐபிஎல் தொடரில் நம்பர் 1 அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2020 ஆம் ஆண்டு தொடர் மிகவும் மோசமானதாக அமைந்து விட்டது. அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியது.
இதனால் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி பல மாற்றங்கள் செய்து முற்றிலும் புதிய அணியாக பங்கேற்க திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் மிகச் சிறிய அளவில் நடைபெறும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், சென்னை அணியின் கையில் மிகவும் குறைவான பணமே உள்ளது. இதனால், அதிக விலையுடன் உள்ள வீரர்களை வெளியே அனுப்ப சென்னை அணி திட்டமிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக, கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோரை சென்னை அணி வெளியே அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தொடரில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா அறிவித்திருந்தார். ஆனால், அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, ரெய்னா இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னாவை சென்னை அணி தக்க வைத்துக் கொண்டால், அவருக்கு 11 கோடி ரூபாய் சென்னை அணியின் பண மதிப்பில் இருந்து செலவாகும். அவ்வளவு பெரிய தொகைக்கு அவரை அணியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அந்த பணத்தை மாற்று வீரர்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சென்னை அணியில் தோனிக்கு அடுத்தபடியாக, ரெய்னாவிற்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம். பல போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெறவும் ரெய்னா முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால், அவர் சென்னை அணியில் இருந்து விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில், நிச்சயம் சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதே உண்மை.

மற்ற செய்திகள்
