"முதல்ல ஒரு சொந்த 'வீடு' வாங்கணும்..." 'டெம்போ' டிரைவர் மகன் டூ 'ஐபிஎல்'... 'கடின' உழைப்பால் சாதித்து காட்டிய 'இளம்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்த டி 20 தொடரின் மூலம், பல இளம் வீரர்களை இந்திய அணி அடையாளம் கண்டுள்ளது.
ஏழ்மை நிலையில், கடுமையாக கஷ்டப்பட்ட பல வீரர்கள், தங்களது விடா முயற்சியால் முதல் தர போட்டிகள் முதல் ஐபிஎல் தொடர் வரை ஜொலித்ததன் மூலம் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பும் பலருக்கு கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு வீரரை இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக அணியில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்த ஏலத்தில், குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியா (Chetan Sakariya) என்ற 22 வயதான இளம் வீரரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அவ்வளவு சாதாரணமாக ஒன்றும் இந்த வாய்ப்பு, சக்காரியாவுக்கு கிடைத்திடவில்லை.
சக்காரியாவின் தந்தை டெம்போ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய நிலையில், கிரிக்கெட் ஆடிக் கொண்டே, மறுபக்கம் வேலை பார்த்து காப்பாற்றி வந்துள்ளார் சக்காரியா. அதே போல, அவரது வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டிவி இல்லை. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, நண்பர்கள் வீட்டில் சென்று தான் அவர் மேட்ச் பார்த்து வந்துள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா, சவுராஷ்டிரா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். தனது கடின உழைப்பால், மிகவும் இளம் வயதில் ஐபிஎல் ஏலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் தொகைக்கு ஏலம் போயுள்ள நிலையில், தனக்கு கிடைக்கும் பணத்தின் மூலம், சொந்த வீடு வாங்க ஆசைப்படுவதாக சக்காரியா தெரிவித்துள்ளார்.
'ஒரு நல்ல வீடு வாங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நாங்கள் இப்போது குஜராத் மாநிலம், வர்தேஜ் என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். ராஜ்கோட் பகுதியில் வீடு ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அப்படி நடந்தால், அங்கிருந்து கிரிக்கெட்டில் ஈடுபடுவது எனக்கு எளிதாக இருக்கும்' என சேத்தன் சக்காரியா விருப்பத்துடன் கூறியுள்ளார்.