'அவசர பட்டுட்டோமோ...' 'அந்த' 2 பேரால தான் 'இந்த' நிலைமை...! - கலங்கி நிற்கும் கொல்கத்தா அணி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணி கடந்த சில போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் ப்ளே ஆப் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டன் இயான் மோர்கன் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
ஐபிஎல் 2020-ல் கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. வரிசையாக வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் செல்லும் என்று நம்பப்பட்ட கொல்கத்தா, தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்றைய (29-10-2020) ஆட்டம் வரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த போட்டியில் வென்றாலும் கூட மிக மோசமான ரன் ரேட் வைத்திருப்பதால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்வது கடினம் என கூறப்படுகிறது.
தொடக்கம் முதலே இந்த சீசனில் கொல்கத்தா அணி நன்றாகவே விளையாடி வந்ததது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக ஆடி தோல்விகளை தழுவியது.
வெற்றி பெற்றதில் ஒரு போட்டி ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவரில் வென்றது. இதனால் கொல்கத்தா அணி தற்போது பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட வாய்ப்பிழந்துள்ளது எனலாம்.
கொல்கத்தா அணியின் இந்த தோல்விக்கு அணியின் கேப்டனை இடையில் மாற்றப்பட்டதுதான் காரணம் என்கிறார்கள். கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்த போது நான்கு போட்டிகளில் வென்றது. ஆனால் இயான் மோர்கன் வந்த பிறகு இரு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இந்த கேப்டன் பதவி மாற்றம் மொத்தமாக அணியின் சமநிலையை குலைத்து விட்டதாக கருதுகிறார்கள். கேப்டன் பதவியை துறந்ததால் அணிக்குள் இருந்த முடிவு எடுக்கும் தன்மை, திட்டமிடல் அனைத்தும் பின்தங்கியது. அதிலும் இயான் மோர்கன் எடுக்கும் முடிவுகள், திட்டமிடல்கள் எதுவும் சரியில்லை. கொல்கத்தா அணியின் இந்த சரிவுக்கு இரண்டு பேர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒன்று தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்த முடிவு கொல்கத்தா அணிக்கு எதிராக மாறியது என கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அணி நிர்வாகம் தான் தினேஷ் கார்த்திக்கை நீக்கியது. இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இயான் மோர்கனும் இதற்கு காய் நகர்த்தி வந்தார் எனவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்த இரண்டில் ஒன்றுதான் கேப்டன் தலைமை மாற காரணம் என்று கூறுகிறார்கள்.
இது தான் கொல்கத்தா அணியின் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. அவசரப்பட்டு கேப்டனை மாற்றிவிட்டோமோ என்று அணி நிர்வாகம் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணியின் சரிவினால் ஷாருக்கான் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.