‘ராணாவுக்கு அபராதம்.. பும்ராவுக்கு வார்னிங்’.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் நடத்தை விதிமீறல் செய்ததற்காக கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு அபராதமும், மும்பை வீரர் பும்ராவுக்கு வார்னிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

புனே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும், பொல்லார்டு 5 பந்துகளில் 22 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டியை செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் எடுத்தனர். அதில் பேட் கம்மின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அம்பயர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஐபிஎல் நிர்வாகம் நடத்திய விசாரணையில் இருவரும் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து நிதிஷ் ராணாவுக்கு நேற்றைய போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பும்ராவுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இருவரும் என்ன தவறு செய்தனர் என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளில் லெவன் 1 தவறை செய்ததால் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
