சேவாக்'க அவுட் ஆக்க ஆஸ்திரேலியா வெச்ச பொறி.. "கடைசி'ல இது தான் நடந்துச்சு.." பிரெட் லீ பகிர்ந்த 'அதிரடி' விஷயம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் அபாயகரமானவர் பிரெட் லீ. சுமார் 140 கி.மீ வேகத்துடன் சராசரியாக பந்து வீசும் பிரெட் லீயின் பந்தினை எதிர்கொள்வது என்பது சற்று கடினமான ஒன்று தான்.
தன்னுடைய காலத்தில் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த பிரெட் லீ, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் குறித்து அதிரடி கருத்து ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில், பிரெட் லீ வெளியிட்ட வீடியோ ஒன்றில் சேவாக் பற்றி சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.
"ஒரு நாள் போட்டியில், சேவாக்கிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தது. சேவாக் பேட்டிங் செய்யும் போது, தேர்ட் மேன் பகுதியில் ஒருவரை நிறுத்தி இருந்தோம். அதன் படி, அவர் அடிக்க முயற்சிக்கவும் அது தேர்ட் மேனிடம் கேட்ச் ஆவது போலவும் ஒரு பொறி வைத்திருந்தோம். தொடர்ந்து, நானும் சற்று வைடாக ஷார்ட் பால் ஒன்றை வீசியதும், அவர் வலையில் சிக்க போகிறார் என நினைத்தேன். ஆனால், நான் வீசிய பந்தினை சிக்சருக்கு அனுப்பினார் சேவாக். அப்போது தான் இவர் ஒரு சிறந்த வீரர் என நான் நினைத்தேன்.
அத்துடன் அந்த சிக்ஸை அடித்து விட்டு, என்னை நோக்கி சிறிதாக கண் சிமிட்டவும் செய்தார். சேவாக்கிடம் சிறந்த விஷயம் என்னவென்றால் அவரது குணம் தான். கிரிக்கெட் விளையாட்டை அவர் மிகவும் விரும்பினார். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போராடி ஆடுவதையும் அவர் விரும்பினார். பலரும் சேவாக்கை டி 20 அல்லது ஒரு நாள் போட்டி வீரர் என பார்த்தார்கள். ஆனால், நான் அவரை ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் என்று தான் கூறுவேன்.
ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து வீச்சாளராக நாம் முதல் பந்தை வீசும் போது, நமது ரிதத்தை கண்டறிய முயற்சி செய்வோம். அப்படி மனதில் வைத்து விட்டு நீங்கள் பந்து வீசும் போது, உங்கள் முதல் பந்தையே சேவாக் அடித்து ஆடும் போது, உங்கள் நம்பிக்கை அங்கேயே குறைந்து விடும். அதைத் தான் அவர் செய்ய விரும்பினார்" என சேவாக்கிற்கு பிரெட் லீ புகழாரம் சூட்டி உள்ளார்.