'டீம் எல்லாம் நல்லா தான் இருக்கு!.. ஆனா 'இத' மறந்துட்டீங்களே'!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... இந்திய அணியில் சிக்கல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான வீரர்கள் தேர்வில் இந்திய அணி முக்கியமான ஒரு விஷயத்தை தவறவிட்டுவிட்டதாக முன்னாள் வீரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதனை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் வலதுகை லெக் ஸ்பின்னர்கள் மற்றும் ரிஸ்ட் (மணிக்கட்டு) ஸ்பின்னர்கள் இல்லை. மாறாக அஸ்வின், வாசிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களே இடம் பெற்றுள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவு என பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் டானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்திய படை சிறப்பாக தான் உள்ளது. ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னர் இல்லை. இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் லெக் ஸ்பின்னர்கள் நிறைய உதவுவார்கள். அதனால் தான் நான் அங்கு நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தினேன். எனவே, அணியில் லெக் ஸ்பின்னர் இல்லாதது பின்னடைவாக உள்ளது. அணியில் ஃபிங்கர் ஸ்பின்னர்கள் இருக்கலாம், ஆனால், அவர்களுடன் ரிஸ்ட் ஸ்பின்னர்களும் இருந்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்திய அணியில் ராகுல் சஹார் கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவரின் உயரம், மற்றும் பந்தை டெலிவரி செய்யும் விதம் பேட்ஸ்மேன்களை திணறவைக்கும். இதற்காக தான் நியூசிலாந்து அணி சௌதியை வைத்துள்ளது. எனவே, லெக் ஸ்பின்னருக்கு வாய்ப்பிருந்தால், ராகுல் சஹார் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால், நியூசிலாந்து அணி சாதாரணமான ஒன்று கிடையாது. குறிப்பாக, இங்கிலாந்து போன்ற களங்களில் மிக சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.