'அநியாயம்'!.. 'ஏன் இந்த ஓரவஞ்சனை?.. முக்கிய பதவில இருந்துட்டு இப்படி பண்ணலாமா'?.. பிசிசிஐ தலைவர் கங்குலி மீது சரமாரி குற்றச்சாட்டு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவர் கங்குலி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா காரணமாக கிரிக்கெட் தொடர்கள் பெரியளவில் நடைபெறாமல் உள்ளது. சமீபத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரும் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படுவதாக கங்குலி அறிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால், இந்திய ஆண்கள் அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. கடந்த 2020 ஐபிஎல் தொடங்கி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்துக்கு எதிரான தொடர், 2021 ஐபிஎல் தொடர் என நடந்தது. இதனால், பிசிசிஐ ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள கங்குலி, நாம் என்ன செய்வது? இந்த கொடிய கொரோனா வைரஸுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். இதனால் தான் மகளிர் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அமைத்தது போலவே மகளிருக்கும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்து ஆடியது.
இதே போல் 8 வருடங்கள் கழித்து, தற்போது இந்திய மகளிர் அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடவுள்ளது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்லும் அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி டி20 போட்டிகளில் ஆடவுள்ளனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடர் உள்ளது. அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இந்தியா வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து செல்லும் போது மிகப்பெரும் தொடர் உள்ளது. இதெல்லாம் கேட்ட பிறகுமா என்னை ஆண்கள் அணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என குற்றம்சாட்டுவீர்கள் என கங்குலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
