‘இந்த’ நேரத்துல இப்படி ஒரு விவகாரத்திலா சிக்கணும்..? ஆஸ்திரேலியா கேப்டன்களும் தொடரும் சர்ச்சைகளும்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாலியல் புகார் ஒன்றின் கீழ் சிக்கிய ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஆன ஸ்டீவ் ஸ்மித் ‘சாண்ட்பேப்பர்’ சர்ச்சையில் பதவியில் இருந்து விலகி அணியில் இருந்தும் தடை செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியா கேப்டன்களுள் பதவிக்காலத்தை சர்ச்சைகளால் நிறைவு செய்த கேப்டன்களுள் ஸ்டீவ் ஸ்மித்-ஐ தொடர்ந்து தற்போது மற்றொரு வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்த டிம் பெய்ன்னும் ஒரு சர்ச்சையில் சிக்கி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடும் போது அன்று ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார். இன்று, டிம் பெய்ன் அதேபோல் கண்ணீருடன் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய போது சாண்ட்பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அன்றைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கினார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கான தடையை விதித்தது. அன்று ஸ்மித் இடம் இருந்து பதவியை பெற்றுக் கொண்டவர் தான் டிம் பெய்ன்.
ஸ்மித்தை போலவே இன்று டிம் பெய்ன்னும் சர்ச்சையில் சிக்கி தனது கேப்டன் பதவியை இழந்துள்ளார். டிம் பெய்ன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவருக்கு ஆபாசமான புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண்ணே அளித்த புகாரின் பெயரின் டிம் பெய்ன் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் பெய்ன் மீது குற்றம் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்னை தொடர்ந்து பெரிய அளவில் வெடித்து சர்ச்சையைக் கிளப்ப தானே முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார் டிம் பெய்ன்.
இதுகுறித்து டிம் பெய்ன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நடந்த அத்தனை விஷயங்களுக்காகவும் நான் விருந்துகிறேன். எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் என்னைச் சார்ந்த பலருக்கும் நான் பெரும் காயத்தை ஏற்படுத்து இருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியின் நற்பெயருக்கு என்னால் அவப்பெயர் ஏற்பட்டது என்றால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை என் மனைவி என்னை மன்னித்துவிட்டார். ஆனாலும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு என நான் நினைக்கிறேன். ஆஷஸ் தொடர் நெருங்கும் சூழலில் நான் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.