ஆடம்பர திருமணம்... அடுத்த சில நாட்களில் 'புதுமாப்பிள்ளை' மரணம்! - கொரோனா-வால் மொத்த குடும்பத்தின் மீதும் 'கிரிமினல் வழக்கு'! - பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆடம்பர திருமணம்... அடுத்த சில நாட்களில் 'புதுமாப்பிள்ளை' மரணம்! - கொரோனா-வால் மொத்த குடும்பத்தின் மீதும் 'கிரிமினல் வழக்கு'! - பரபரப்பு சம்பவம்!
திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை பலியாகியுள்ளார். தொற்றை மறைத்த குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை பலியாகியுள்ளார். இதனால் ஒரு வயது குழந்தை உள்பட 70 பேர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு இருந்த வைரஸ் தொற்றை மறைத்த குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் டவுனை சேர்ந்தவர் 26 வயது வாலிபர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 25-ந்தேதி அந்த வாலிபருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மறுநாளே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது சளி, ரத்தம் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து புதுமாப்பிள்ளையான அந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துவிட்டார். திருமணமான 5-வது நாளில் புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பலியான புதுமாப்பிள்ளையின் குடும்பத்தை சேர்ந்த 75, 65 வயது உடைய இரு முதியவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் மூலம் ஒரு வயது குழந்தை, 8 சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 70 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கும் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், பலியான புதுமாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன்பே கொரோனா அறிகுறி இருந்ததும், இதை மறைத்து திருமணத்தை நடத்தியதும், இதனால் அவரது குடும்பத்தை சேர்ந்த இரு முதியவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. எனவே புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரகாஷ் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரகன்னடா கலெக்டர் ஹரீஷ்குமார், கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த வாலிபருக்கு அறிகுறி இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். இதுதொடர்பாக போலீசார், புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த 2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 70 பேர் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பட்கல் நகர் முழுவதும் 2 காய்ச்சல் கிளினிக்குகள் அமைத்து சோதனை நடத்தி வருகிறோம். இதில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.