‘கழுத்தை அண்ணன் இறுக்க அப்பா கத்தியால் குத்திய பயங்கரம்..’ படிக்க விரும்பிய சிறுமிக்கு நடந்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 16, 2019 08:41 PM

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரில் 15 வயது சிறுமியை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP girl stabbed by father to stop her from studying

பள்ளி செல்லும் சிறுமியை குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் சிறுமி படிக்க விரும்புவதாகவும், திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையால் குடும்பத்தினரின் தொந்தரவு தாங்காமல் தன்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்துள்ளார் சிறுமி.

சமீபத்தில்தான் அங்கிருந்து பெற்றோர்களால் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தால் தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்ட சிறுமி கால்வாயிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், “அப்பா என்னை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த என்னுடைய அண்ணன் ஒரு துணியைக் கொண்டு என் கழுத்தை இறுக்கினான். பின்னால் இருந்த அப்பா என்னைக் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். என்னை விட்டுவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. இருவரும் என்னை கால்வாயில் தூக்கி வீசினார்கள். நான் தண்ணீரில் சிறிது தூரம் நீந்திச் சென்றுவிட்டதால் அவர்களால் என்னைப் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி கூறுகையில், “சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #UP