60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி... 3 நாட்களாக சிறுமியை மீட்கப் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 05, 2019 05:48 PM
உத்தரப்பிரதேசத்தில் 60 அடி ஆழம் நிறைந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுமியை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

கமல்கஞ்ச் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ரஷிதாபூர் கிராமத்தில், ஆறு வயதான சிறுமி சீமா புதன்கிழமையன்று, 60 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 24 அடி ஆழத்தில் முதலில் சிக்கியிருந்தார். மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. வியாழக்கிழமை இரவு மீட்புக் குழுவினரிடம் தண்ணீர் கேட்ட சிறுமிக்கு, பைப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை மேலும் 34 அடி ஆழத்திற்கு சென்று சிறுமி சீமா சிக்கியுள்ளார்.
சீமாவின் மாமா, தனது வீட்டிற்கு அருகே ஆட்களை வைத்து ஆழ்துளை கிணறு ஒன்றை புதன்கிழமையன்று தோண்டிக்கொண்டிருந்தார். கிணறை மூடாமலும், தகுந்த பாதுகாப்பு ஆட்களை நிறுத்தி வைக்காமலும் மதிய உணவிற்கு, வேலை ஆட்கள் சென்றிருந்தனர். அப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர், சிறுமியின் அழுகுரல் ஆழ்துளை கிணற்றில் இருந்த வந்தபோதுதான், சிறுமி சீமா கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில், பக்கத்தில் குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்க ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் போராடி வருகின்றனர். மீட்புப் பணியின்போது, 2 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தந்தை அண்மையில் உயிரிழந்த நிலையில், தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், சிறுமி சீமா மாமா வீட்டில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
