75 பக்தர்களுடன் 'சபரிமலைக்கு' சென்ற 'அரசு பேருந்து'... திடீரென 'டயர் வெடித்து' தீப்பிடித்து எரிந்த சம்பவம்... 'அலறியடித்து' ஓடிய பயணிகள்...
முகப்பு > செய்திகள் > இந்தியா75 பயணிகளுடன் சபரிமலைக்கு சென்ற அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாசி மாத பூஜைக்காக கடந்த 13-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்றும் ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர்.
நேற்று மாலை பம்பை செல்லும் அரசு பேருந்தில் சுமார் 75 பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பேருந்து சாலங்காயம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்தின் அடிப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.
பேருந்தில் தீ பரவியதும் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு வெளியே குதித்து விட்டார். பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி பேருந்திலிருந்து இறங்கினர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்துவிட்டது. பேருந்திலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 3 பேருக்கு மட்டும் காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.