திடீர்னு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அதிகாரி.. 9 நாளா நடந்த தேடுதல் வேட்டை.. கடைசியில கிடைச்ச தகவலால் திகைச்சுப்போன குடும்பத்தினர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அதிகாரி ஒருவர் 9 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
கனமழை
சமீப நாட்களாக மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனை தொடர்ந்து பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் கடும் எச்சரிக்கைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள பார்வதி ஆற்றில் சிக்கிய அதிகாரி ஒருவரின் உடல் 9 நாட்களுக்கு பிறகு 350 கிலோமீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. தாசில்தார் நரேந்திர சிங் தாக்கூர் (45) மற்றும் பட்வாரி மகேந்திர சிங் ராஜாக் ஆகியோர் ஆகஸ்ட் 15 அன்று ஒரு விருந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, செஹூரில் உள்ள சிவன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதேநாளில் ராஜாக்கின் உடல் சற்று தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நரேந்திர சிங்கின் உடல் கிடைக்காததால் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
350 கிலோமீட்டர்
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி, ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள பரோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்வதி ஆற்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி அப்பகுதி தாசில்தாரின் முன்னிலையில் உடலை புதைத்தனர். மேலும், இதுகுறித்த தகவலையும் ஊடகங்களில் காவல்துறையினர் வெளியிட்டனர்.
இதனை அறிந்த நரேந்திர சிங்கின் குடும்பத்தினர் உடனடியாக 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷியோபூர் மாவட்டத்துக்கு சென்றிருக்கின்றனர். இதனிடையே அது இறந்துபோன தங்களது தந்தை தான் என நரேந்திர சிங்கின் மகன் மற்றும் மகள் தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய அதிகாரியின் உடல் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.