"கரெக்ட்டா அந்த சம்பவத்துக்கு 2 வாரத்துக்கு முன்னாடி".. சச்சின் பகிர்ந்த உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் முக்கியமான அறிவுரை ஒன்றை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் காரில் செல்லும்போது அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணியவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போது Road Safety World Series Tournament-ல் பங்கேற்றுவரும் சச்சின் நேற்று சாலை விபத்துகளை தவிர்க்க சீட் பெல்ட்டுகள் துணை புரிவதாகவும் மக்கள் பயணம் செல்லும்போது மறக்காமல் அதை அணியவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி வாகன விபத்தில் உயிரிழந்தது குறித்தும் அவர் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. லண்டனின் புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியில் படித்தவரான இவர் முதலில் தனது குடும்பத்தாரின் பாரம்பரிய தொழிலான கட்டுமான பணிகளை கண்காணித்துவந்தார். அதன்பிறகு டாடா குழுமத்தில் இணைந்தார். படிப்படியாக முன்னேறிய மிஸ்திரி 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் அந்த பணியில் இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் சரோட்டி அருகே நேர்ந்த சாலை விபத்தில் மிஸ்திரி மரணமடைந்தார். பயணத்தின்போது அவர் சீட்பெல்ட் அணியவில்லை என தகவல்கள் வெளியாகின.
அட்வைஸ்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சச்சின்,"சாலை விபத்தில் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் இறப்பதற்கு இரண்டரை வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு நேர்காணலில், சீட் பெல்ட் அணிவது சிறந்த மற்றும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு என கூறியிருந்தேன். பாதுகாப்பு பட்டியல் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட போது இதை நான் தெரிவித்திருந்தேன். சாலைகளில் சிலர் சீட் பெல்ட் அணியாமல் செல்வதை நான் அடிக்கடி பார்க்கிறேன். எப்போதும் மறக்காமல் சீட் பெல்ட் அணியவேண்டும். நான் வழக்கமாக அடிக்கடி பயணங்களில் ஈடுபடுபவன். ஒவ்வொரு முறை காரில் ஏறும்போதும் முதலில் சீட்பெல்ட்டை தான் அணிவேன். இல்லையென்றால் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக எனக்கு தோன்றும்" எனக் என்றார்.

மற்ற செய்திகள்
